அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x

திருப்பத்தூரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

சாலை மறியல்

திருப்பத்தூர் 7-வார்டில் டபேதார் முத்துசாமி தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு கால்வாயின் வழியாக கழிவுநீர் வெளியேற முடியாமல் உள்ளதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கழிவுநீர் செல்லவும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story