வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தொண்டாமுத்தூர் அருகே விவசாயியை தாக்கி அழைத்து செல்ல முயன்ற வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் அருகே விவசாயியை தாக்கி அழைத்து செல்ல முயன்ற வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் விராலியூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 25). இவரது தோட்டம் அருகே சின்னையன், பொன்னுசாமி ஆகியோரது தோட்டத்தில் தக்காளி பயிரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் காட்டு யானை கள் புகுந்தன. அவை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தி அட்டகா சம் செய்தது. இது குறித்து விவசாயிகள் தரப்பில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விவசாயி மீது தாக்குதல்
ஆனால் வனக்காவலர் சரவணன், வனத்துறை ஊழியர் விஜயகுமார், ஜீப் டிரைவர் சரவணன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திற்கு தாமத மாக வந்தனர். அவர்களிடம் விவசாயி பாலசுப்பிரமணியம் ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வனத்துறையினர், விவசாயி பாலசுப்பிரமணியத்தை சரமாரியாக தாக்கி ஜீப்பில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். இதனால் அவர் கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வனத்துறையினரின் ஜீப்பை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலைமறியல்
உடனே பாலசுப்பிரமணியத்தை வனத்துறையினர் ஜீப்பில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர். இதையடுத்து மது போதையில் வந்து விவசாயியை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொண்டாமுத்தூர் அருகே செலம்பனூரில் நேற்று காலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிமலை பட்டினம் ஊராட்சி தலைவர் நாகமணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக செலம்பனூரில் நேற்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.