கோவில் அறங்காவலரை நீக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கோவில் அறங்காவலரை நீக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

நாட்டறம்பள்ளி அருகே நாராயண சுவாமி கோவிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலரை நீக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே நாராயண சுவாமி கோவிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலரை நீக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

கோவில் திறக்க எதிர்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மாணங்கோயில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாராயண சுவாமி கோவில் உள்ளது.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடி இருந்த நிலையில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை திறக்க சென்றனர். அப்போது கோவில் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று புதுப்பேட்டை-திருப்பத்தூர் வழியாக வெலக்கல்நத்தம் செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கோவிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் பழனியை நீக்கக்கோரி கேஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அறங்காவலர் மீது புகார்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அறங்காவலர் பழனி மீது பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

மேலும் அவரை நீக்க வேண்டும் என்றனர். போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story