குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

பொள்ளாச்சி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பொள்ளாச்சி வடுகபாளையம் அருகில் தாளக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்காலனி உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை ஆர்.பொன்னாபுரத்தில் இருந்து வடுகபாளையம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மறியலை கைவிட போவதில்லை என்று சாலையில் அமர்ந்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும். சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், புதுக்காலனி பகுதிக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கியும், மழைநீரை குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றோம். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.


Next Story