குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கணபதி
கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19-வது வார்டு
கோவை மாநகராட்சி 19-வது வார்டு மணியகாரம்பாளையம், லட்சுமிபுரம், கணக்கன் தோட்டம், எம்.கே.ஜி. நகர், பாலாஜி லே அவுட், திருவள்ளுவர் நகர், வெள்ளிங்கிரி கவுண்டர் வீதி உள்ளிட்ட வீதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு கடந்த 12 நாட்களாக குடிநீர் வரவில்லை.
இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கணபதியில் இருந்து துடியலூர் செல்லும் ரோடு மணியகாரம்பாளையம் பிரிவில் திடீரென்று சாலையின் குறுக்கே நின்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கணபதி துடியலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள், கோவை மாநகராட்சி குடிநீர் வடி கால் வாரிய செயற்பொறியாளரிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
குழாயில் உடைப்பு
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில் குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இனி தாமதமின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் கோவை மாநகரில் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்க தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.