குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
செம்மினிபட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
வாடிப்பட்டி,
செம்மினிபட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மோட்டார் பழுது
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மினிபட்டி ஊராட்சி 5-வது வார்டு காமராசர்புரம் காலனியில் 110 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தனியாக குடிநீர் நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள கொட்டமடக்கி கண்மாயில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தக் குடிநீர் வரும் பைப் லைன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். இதனால் பலமுறை பைப்லைன் பழுதாகி விடுகிறது. தற்போது கண்மாயில் தண்ணீர் நிரம்பி நிற்பதால் அந்த பழுதை சரிபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் முறையாக தண்ணீர் வழங்க முடியவில்லை.
மேலும் 2 மின்மோட்டார்களில் ஒரு மின் மோட்டார் பழுதாகி விட்டது. அதையும் சரி செய்ய முடியவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு 2 மாதமாக பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு காமராசர்புரம் காலனி முன்பாக வாடிப்பட்டி - குட்லாடம்பட்டி சாலையில் முட்களை வெட்டி போட்டு அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் பிச்சை தலைமையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர். தகவலறிந்த யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சார்லஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, ஊராட்சி மன்ற தலைவர் தெய்வ தர்மர், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், கிராம உதவியாளர் ஜெயக்குமார், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், முருகேசன் உள்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கண்மாயில் தண்ணீர் அதிகம் இருப்பதால் பழைய இணைப்பை துண்டித்து விட்டு புதிதாக பைப் லைன் அமைத்து 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.