குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கந்தர்வகோட்டை அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி கட்டிடம்
கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லா கோட்டையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் அங்கன்வாடி சமையல் கூடத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், 15 நாட்களுக்குள் குடிநீர் பற்றாக்குறையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர். மேலும் அங்கன்வாடி கட்டிடம் விரைவில் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.