வாலிபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
வேலூர் காகிதப்பட்டறையில் மூதாட்டியை அடித்து கொலை செய்த வாலிபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூதாட்டி கொலை
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ராதாம்மாள் (வயது 71). இவர் கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் வீடுபுகுந்து அவரை தாக்கி, அவருடைய மூக்குத்தியை பறித்துக்கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிறிதுநேரத்தில் வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நின்றுகொண்டிருந்த வாலிபரை மடக்கிப் பிடித்து வேலூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த ராதாம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
சாலை மறியல்
இதற்கிடையே மூதாட்டியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த காகிதப்பட்டறையை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை உடனடியாக கைது செய்யக்கோரி வேலூர்-ஆற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ரவி, பழனிமுத்து, டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.