குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x

வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

வேலூர் சைதாப்பேட்டை மாநகராட்சி 36-வது வார்டில் பசபதான் மேட்டு தெரு உள்ளிட்ட அப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளது. இங்கு சுமார் 200 வீடுகளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வந்தனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பி.டி.சி.சாலையில் திடீரென காலி குடங்களுடன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு வேலூர் வடக்கு போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறியதாவது:-

கால்வாய் தூர்வார வேண்டும்

எங்கள் பகுதியில் பல நாட்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், முதியவர்கள், குழந்தைகளை வைத்துள்ள பலர் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் செல்கிறது. கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story