குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

மின்மோட்டார் பழுது

விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் காலனி பகுதியில் 2 ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதனால் அப்பகுதியில் மீதமுள்ள ஒரு மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், போதுமான அளவிற்கு குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

சாலை மறியல்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் திரண்டனர். அப்போது காலி குடங்களுடன் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story