அண்ணா கோளரங்கத்தில் பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம்


அண்ணா கோளரங்கத்தில் பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம்
x

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய காட்சியை கண்டு திருச்சி அண்ணா கோளரங்கத்தில் பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

திருச்சி


சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய காட்சியை கண்டு திருச்சி அண்ணா கோளரங்கத்தில் பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அண்ணா கோளரங்கத்தில்

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை பொதுமக்கள் காணும் வகையில் திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் அகண்ட திரை மற்றும் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது. கடைசி 15 நிமிடத்தை மிகவும் ஆர்வமாக கண்டு களித்த பொதுமக்கள் இறுதியாக சந்திரயான் தரையிறங்கியபோது, கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல் திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சந்திரயான் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக காணும் வகையில் அகண்ட திரை அமைத்து சிறப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அறிவியல் துறையை ஆசிரிய-ஆசிரியைகள் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய நிகழ்வு மற்றும் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த வரலாற்றையும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார்கள்.

இந்த காட்சியை கண்டுகளித்த பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

பெருமையாக இருக்கிறது

விமானநிலைய பகுதியை சேர்ந்த செவிலியர் விஜயலெட்சுமி:- சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. குழந்தைகளை கோளரங்கத்துக்கு அழைத்து வந்து பார்த்தோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர் முகமதுஅஸ்லம்:- இது இந்தியாவுக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் பெருமையான தருணம். சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்து இருப்பதால் இந்தியாவின் புகழ் அதிகரிக்கும். சந்திரயான் தரையிறங்கும் காட்சியை பார்க்க மிகவும் ஆசையாக இருந்தேன். அந்த ஆசை நிறைவேறி உள்ளது.

140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி

அண்ணா கோளரங்க இயக்குனர் அகிலன்:- நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ 15 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. தற்போது சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது. இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த வெற்றி.

மாணவி சாருமதி:- நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா சந்திரயான் - 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியான தருணம். சந்திரயான் - 3 திட்டம் தற்போது வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளது. இதன் மூலம் நானும் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே எனது ஆசை.

புதிய கண்டுபிடிப்புகள்

தா.பேட்டை பகுதியை சேர்ந்த ஆசிரியர் பிரேம்ஆனந்த்:- இந்த மாபெறும் பணியில் விஞ்ஞானிகள் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளதை உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அறிவியல் வளர்ச்சியில் நாம் பல சவால்களை தாண்டி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம். இந்த சாதனைகள் மாணவ, மாணவிகளிடம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்வதற்கு மிகுந்த உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள்கூறினர்.


Next Story