கொடைக்கானலில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி கடந்த மக்கள்...!


கொடைக்கானலில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி கடந்த மக்கள்...!
x

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கயிறுகட்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து சென்றனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் நேற்று முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. வில்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு ஆகிய பகுதிகளில் விடியவிடிய பெய்த கனமழையால் இங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூலிவேலை பார்ப்பதற்காக வெளி இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கயிறுகட்டி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளி இடங்களுக்கு செல்ல முடியாமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் சிரமப்பட்டனர்.

இங்கு கனமழை பெய்யும் சமயத்தில் எல்லாம் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும், ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும்போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் இங்கு இரும்பு பாலம் அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல பேத்துப்பாறை, செம்பரான்குளம் பகுதியிலும் கனமழை சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியிலும் நிரந்தர பாலம் அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story