குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x

திருவோணம் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருவோணம் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தை சேர்ந்த இடையாத்தி ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாங்கொல்லை பகுதிக்கு கடந்த சில நாட்களாக பொது குடிநீர் குழாயில் சரிவர தண்ணீர் வரவில்லை. இதனால் குடிநீருக்காக கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் நேற்று குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பட்டுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் நெய்வேலி கடைவீதி அருகே மறியலில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாட்டாத்திக்கோட்டை போலீசார் மற்றும் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story