வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூ வாங்க குவிந்த பொதுமக்கள்


வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூ வாங்க குவிந்த பொதுமக்கள்
x

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூ வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

வேலூர்

வரலட்சுமி விரதம்

வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விசேஷ நாட்களில் பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் விலை உயர்ந்து காணப்படும். மக்களும் பூக்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்வார்கள்.

இந்த நிலையில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில் பூக்கள் அதிகளவு வரத்து இருந்தது. பொதுமக்களும் பலர் ஆர்வமுடன் பூக்களை வாங்கிச் சென்றனர். பூ மார்க்கெட் வளாகப் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. எனினும் எதிர்பார்த்த அளவில் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து வேலூர் நேதாஜி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் முத்துகணேசன் கூறியதாவது:-

மல்லி ரூ.500-க்கு விற்பனை

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பொதுமக்கள் பூக்களை அதிகளவு பயன்படுத்துவார்கள். இதில் குறிப்பாக தாழம்பூ முக்கிய இடத்தை பிடிக்கும். கடந்த ஆண்டு ஒரு பூ ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு ரூ.100-க்கு விற்பனை செய்யும் நிலை இருந்தது. இதேபோன்று மற்ற பூக்களின் வரத்தும் அதிகரிப்பால் பூக்களுக்கு ஏற்றவாறு விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. பொதுமக்கள் பலர் பூக்களை வாங்கிச் சென்றனர். எனினும் போதிய வியாபாரம் இல்லை.

பூக்கள் விலையை பொறுத்தவரையில் (ஒரு கிலோ)

முல்லை, ஜாதி மல்லி ரூ.350-க்கும், மல்லிகை ரூ.500-க்கும், ரோஜா, சாமந்தி ரூ.200-க்கும் விற்பனையானது. கனகாம்பரம் நேற்று முன்தினம் ரூ.1200-க்கும் நேற்று ரூ.600-க்கும் விற்பனையானது. இதேபோல சாமந்தியும் சற்று விலை குறைந்து இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story