விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்


விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்
x

விநாயகர் சதுர்த்தி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.

அரியலூர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி அன்று பக்தர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து 3 நாட்கள் கழித்து நீர்நிலைகளை கரைப்பது வழக்கம். வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். விநாயகர் சதுர்த்தியையொட்டி அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை படுஜோராக நடந்தது. சிறியது முதல் பெரிய அளவு வரை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை தயாரிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பக்தர்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்து நேற்று வாங்கி சென்று பிரதிஷ்டை செய்வதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள், பழங்கள், பூக்கள் வாங்க கடைவீதிகளுக்கு நேற்று சென்றனர். அப்போது விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பூஜை பொருட்கள், பழங்கள், பூக்களை வியாபாரிகளிடம் பேரம் பேசி வாங்கி சென்றதை காணமுடிந்தது. வீடுகளில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், அதற்கு குடைகளின் விற்பனையும் சூடு பிடித்தது. ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் நேற்று முன்தினமே பழங்கள், பூக்களின் விலை உயா்ந்தது. கிலோ ரூ.800-க்கு விற்ற மல்லிகை பூ ரூ.200 உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனையானது. செவ்வந்தி, சம்பங்கி கிலோ தலா ரூ.300-க்கு விற்பனையானது.


Next Story