மேம்பாலத்தின்கீழ் பகுதியில் இருந்து அரசு பஸ்களை இயக்கக்கோரி போராட்டத்துக்கு திரண்ட பொதுமக்கள்; மார்த்தாண்டத்தில் பரபரப்பு
மார்த்தாண்டம் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் இருந்து அரசு பஸ்களை இயக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
குழித்துறை,
மார்த்தாண்டம் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் இருந்து அரசு பஸ்களை இயக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு எல்.எஸ்.எஸ். பஸ்கள் இயக்கப்படுகின்றன. மார்த்தாண்டத்தில் மேம்பாலம் கட்டிய பிறகு பம்மத்தில் மேம்பால நுழைவுவாயில் பகுதியில் அகலம் குறைவு என காரணம் காட்டி மேம்பாலத்தின் மேல் பகுதி வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் மேம்பாலத்துக்கு சென்று பஸ்களை பிடிப்பதில் சிரமம் இருந்து வருகிறது. மேலும் பஸ்கள் மேம்பாலத்தின் மீது இயக்கப்படுவதால் கீழ்ப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே இந்த பஸ்களை மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை வைத்தனர்.
பாலத்தின்கீழ் பகுதியில் இயக்கம்
அதைத்தொடர்ந்து கடந்த 11-ந்தேதி மார்த்தாண்டம் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் இருந்து எல்.எஸ்.எஸ். அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
அன்று ஒரு நாளில் சில முறை மட்டுமே இயக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் பழையபடியே மேல்பாலம் வழியாகவே எல்.எஸ்.எஸ். பஸ்கள் சென்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டத்துக்கு திரண்டனர்
மேலும் எல்.எஸ்.எஸ்.பஸ்களை மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக இயக்க வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்துவதற்காக மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரண்டனர். மைதானத்துக்கு கவுன்சிலர்கள் விஜு, ரத்தினமணி, சர்தார்ஷா, அருள்ராஜ், ஆட்லின் கெனில், ரவி, ஜெயந்தி, லலிதா, விஜயலட்சுமி, மினிகுமாரி, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், ஜூலியட் மெர்லின் ரூத், லில்லி புஷ்பம், ரீகன், ஜெனிலாராணி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க துணை தலைவர் தங்கமணி, முன்னாள் செயலாளர் ராஜ செல்வின் ராஜ், தே.மு.தி.க.வை சேர்ந்த ஜான் பிரிட்டோ, ஜெய்சிங், அ.தி.மு.க. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பிரமுகர் ராஜா டைற்றஸ் ஆகியோர் வந்து இருந்தனர்.அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன். சப்-இன்ஸ்பெக்டர் வினீஸ் பாபு ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அங்கு திரண்டவர்கள் கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து தக்கலை துணை சூப்பிரண்டு கணேஷ், மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக டிவிஷனல் மேலாளர் வேலுதாஸ், கிளை மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மேம்பாலத்தின் நுழைவாயில் பகுதியை அகலப்படுத்தினால் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக பஸ்களை இயக்க தயார் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். குழித்துறை நகராட்சியிடம் அந்தப் பகுதியை அகலப்படுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதை அகலப்படுத்தி தர வேண்டியது பொதுப்பணித்துறை என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது அதற்கு தான் ஏற்பாடு செய்வதாக துணை சூப்பிரண்டு கணேஷ் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு திரண்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி கூறும்போது, எல்.எஸ்.எஸ்.பஸ்களை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக இயக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.