ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்


ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
x

அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர்

அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உபரி நீர்

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் தினமும் அதிகளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம், நீர் நிலைகளின் அருகில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நகர்புறம், கிராமப்புற பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் ஆழமான ஆற்று பகுதிகள் மற்றும் குளங்களில் குளிக்க செல்லும் போது பெற்றோர், பெரியோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

படகுசவாரி

பொதுமக்கள் நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்கி சொல்ல வேண்டும். நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ள நிலையில் ஆறு, குளம், ஏரி ஆகியவற்றில் மீன்பிடித்தல், குளித்தல், துணி துவைத்தல் பணிகளில் பொதுமக்கள் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் நிலைகளில் குளிக்க செல்லும் போதும், படகு சவாரி செய்யும்போது பொதுமக்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.திருவிழாக்களில் நீர் நிலைகளை நோக்கி பொதுமக்கள் அதிகமாக கூடுவதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்.

செல்பி எடுக்க கூடாது

பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு இல்லங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மீட்பு பணிகளுக்கு வட்டார வாரியாக மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் நீர் நிலைகளில் நின்று கொண்டு சுய புகைப்படம்(செல்பி) எடுக்க கூடாது.

வெள்ளப்பெருக்கு காலத்தில் ஆறு, வாய்க்கால் பகுதியினை கடப்பதோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது. மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண்: 04366-1077 மற்றும் 04366-226623 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story