நிலவில் சந்திரயான் தரையிறங்கியதை பார்த்தும் கோவை மக்கள் உற்சாகம்
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கியதை பார்த்ததும் கோவையில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது.
கோவை
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கியதை பார்த்ததும் கோவையில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது.
சந்திரயான்-3 விண்கலம்
உலகின் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. பூமியின் துணைக்கோளான நிலவு குறித்த ஆராய்ச்சியில் பிற நாடுகளுடன் இந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி கடந்த 2008-ம் ஆண்டு நிலவுக்கு இந்தியா சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பி சாதித்தது.
2019-ம் ஆண்டு இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த லேண்டர் கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது. இதனை தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் இருந்த லேண்டர் கருவி நேற்று மாலை நிலவில் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
லேண்டர் தரையிரங்கும் காட்சிகள்
நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சிகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து கோவையில் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் லேண்டர் தரையிறங்கும் காட்சிகளை பார்வையிட பெரிய திரைகள் மற்றும் தொலைக்காட்சி வசதிகள் செய்யப்பட்டன. இதனை மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். குறிப்பிட்ட நேரத்தில் லேண்டர் முறையாக தரையிரங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், பல மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தவாறு காணப்பட்டனர். இந்த நிமிடங்கள் அவர்களுக்கு திக்...திக்...திகிலுடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தில் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரை இறங்கியது. நிலவில் லேண்டர் கருவி வெற்றிகரமாக தரையிறங்கியதும் பள்ளியில் கூடியிருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது.தங்களது கைகளை தட்டியும், கரவொலி எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு அங்கிருந்த ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மீடியா டவரில் நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர். சிலர் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி கரகோஷங்கள் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவிலில் யாகம்
இதையொட்டி பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் அம்மன் பாரத மாதா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதற்கிடையில் சந்திரயான்-3 விண்கல லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்க வேண்டும் என்று வேண்டி சந்திர காயத்ரி மந்திர சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சந்திரயான்-3 விண்கல லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் நேரடி காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு பெரிய திரையில் தந்தி டி.வி.யில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வை மாணவ-மாணவிகள் பார்த்தனர். மேலும் நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதும் மாணவ-மாணவிகள் தேசிய கொடியை அசைத்து உற்சாகமாக சத்தம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சந்திரயான்-3 விண்கல லேண்டர் நிலவில் தரை இறங்குவது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.