குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:31+05:30)

திருவெண்ணெய்நல்லூா் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

குடிநீர் வினியோகம் பாதிப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அமாவாசைபாளையம் கிராமத்தில் மின் மோட்டார் பழுதானதால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் காலிகுடங்களுடன் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று குடிநீரை பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் கடலூர்-சித்தூர் சாலையில் அமாவாசை பாளையம் பஸ் நிறுத்தம் முன்பு காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குணசேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஆராயிவீரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story