குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

குடிநீர் கேட்டு ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

விளந்தை ஊராட்சி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை ஊராட்சியில் உள்ள 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சூரக்குழி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விளந்தை 1-வது வார்டு மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காலிக்குடங்களுடன் மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் நேற்று காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story