குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
விராலிமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு
விராலிமலை தாலுகா வல்லக்கோன்பட்டியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 தினங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. அன்று முதல் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல் வல்லக்கோன்பட்டி சாலை அருகே அமைத்த காவிரி குடிநீர் குழாயிலிருந்தும் தண்ணீர் வருவதில்லை எனவும் அப்படியே காவிரி குடிநீர் வந்தாலும் அது நள்ளிரவில் திறக்கப்படுவதால் எங்களுக்கு தெரிவதில்லை. மேலும் இங்குள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் காவிரி குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் குடிநீருக்காக தினமும் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அன்றாட தேவைக்கு தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
சாலை மறியல்
கடந்த 6 நாட்களாகியும் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் கீரனூர் செல்லும் சாலையில் வல்லக்கோன்பட்டி பஸ் நிறுத்தம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி ராதா ஆகியோர் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தற்காலிகமாக லாரி மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.