சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்


சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
x

சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

வையம்பட்டி:

மண் சாலை

மணப்பாறையை அடுத்த முகவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அணைக்கரைப்பட்டி, களத்துப்பட்டிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. வையம்பட்டி - கரூர் பிரதான சாலையில் இருந்து செல்லும் இந்த சாலையில் தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

ஆனால் மழைக்காலங்களில் இந்த வழியாக செல்ல முடியாத அளவிற்கு சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது.

போராட்டம்

இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், எந்தவிட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதும் அந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த களத்துப்பட்டி மற்றும் பெரிய அணைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வையம்பட்டி - கரூர் சாலையில் ஆற்றுப்பாலம் அருகே நெற்பயிர் நாற்றுடன் சுமார் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் பிடித்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வையம்பட்டி போலீசார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக மண் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story