விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஆம்னி பஸ்களில் 'டிக்கெட்' கட்டணம் தொடர்ந்து உயர்வு


விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து உயர்வு
x

சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பிய நிலையில் ஆம்னி பஸ்களில் கட்டணம் தொடர்ந்து உயர்ந்தே காணப்பட்டது. அரசின் எச்சரிக்கையையும் மீறி அடாவடி வசூல் தொடர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதையடுத்து, சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் கிடுகிடுவென கட்டணத்தை உயர்த்திவிடுவது வாடிக்கை.

அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களின் கட்டணமும் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொடுத்ததாக கூறப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று இரவு முதல் பலர் சென்னை திரும்பினர்.

எச்சரிக்கையையும் மீறி வசூல்

எப்போதும்போல நேற்றும் சென்னை திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் உயர்ந்தே காணப்பட்டது. உதாரணமாக திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்து 500 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும், திருச்சி, கோவை, சேலம், ஓசூரில் இருந்து புறப்பட்ட பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் என்ற அளவில் இருந்ததாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

சில பஸ்கள் மட்டும் வழக்கமான கட்டணத்தை நிர்ணயித்திருந்தாலும், பெரும்பாலான பஸ்கள் சாதாரண நாட்களைவிட அதிக கட்டணத்தையே வசூலித்ததாக கூறப்படுகிறது. அரசின் எச்சரிக்கையையும் மீறி அடாவடியாக அதிக கட்டண வசூல் தொடர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story