அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
குத்தாலம் அருகே வாய்க்கால் பாலத்தை சீரமைக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
குத்தாலம்;
குத்தாலம் அருகே வாய்க்கால் பாலத்தை சீரமைக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த பாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசிக்காடு ஊராட்சி முருகன் தோட்டம் கிராமத்தில் கீழத்தெருவுக்கு செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடுவில் இடிந்து விழுந்தது. மேலும் கீழத்தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் காவிநிறத்தில் உள்ளதாக கூறி கீழத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தங்கள் பகுதிக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவாா்த்தை
அப்போது அவர்கள் இடிந்து விழுந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கேட்டும், சுத்தமான குடிநீர் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.