பணத்துக்காக மக்கள் ஓட்டு போடக்கூடாது


பணத்துக்காக மக்கள் ஓட்டு போடக்கூடாது
x

பணத்துக்காக மக்கள் ஓட்டு போடக்கூடாது என்று சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ பேசினார்.

விருதுநகர்

சிவகாசி,

பணத்துக்காக மக்கள் ஓட்டு போடக்கூடாது என்று சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ பேசினார்.

ஓட்டுக்கு பணம்

சிவகாசி நாரணாபுரத்தில் நடைபெற்ற லலிதா திருமண மகால் திறப்பு விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இப்போது அரசியல் என்பது பணம் கொடுத்தால் தான் ஓட்டு என்றாகி விட்டது. அப்படி என்றால் கோடீஸ்வரர்கள் தான் எம்.பி., எம்.எல்.ஏ.வாக முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் அவர்களிடம் என்ன சேவையை மக்கள் எதிர்பார்க்க முடியும்?. இந்தநிலை இந்தியா முழுவதும் இருக்கிறது. அதே நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது கேரளாவில் இல்லை. பதவி இருந்தால் தான் பொதுப்பணி ஆற்ற முடியும் என்ற நிலை இல்லை ஆதலால் பணத்துக்காக மக்கள் ஓட்டு போடக்கூடாது.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் திராவிடமாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். இந்திய தலைவர்கள் பலர் ஸ்டாலின் என்ன சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஸ்டாலின் முயற்சிக்கு நீங்கள் உதவியாக இருக்க வேண்டும்.

வாரிசு அரசியல் அல்ல

திராவிட மாடல் ஆட்சி பல மாநிலங்களில் வர வேண்டும் என்று பலர் விருப்பப்படுகிறார்கள். கொரோனா காலக்கட்டத்தில் என்னால் வெளியே செல்ல முடியாத நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை துரைவைகோ செய்தார். இது வாரிசு அரசியல் அல்ல.

நான் இதுவரை 7 ஆயிரம் கி.மீ. தூரம் நடந்து இருக்கிறேன். நடைபயணம் இன்று பேஷனாகி விட்டது. எல்லோரும் நடைபயணம் செல்கிறார்கள். மதுவை ஒழிக்க, நதிகளை இணைக்க, அரசியலில் நேர்மை வேண்டும் என்றும் நடைபயணம் மேற்கொண்டேன். ஒரு நாளில் 37 கி.மீ. தூரம் நடந்து இருக்கிறேன். கொரோனா நோய் தாக்குதலுக்கு பின்னர் என்னால் முன்பு போல் இயங்க முடியவில்லை.

பண வசதி கிடையாது

என் வாழ்நாளில் நான் சாதித்தது என்றால் ஸ்டெர்லைட்டை நிறுத்தி வைத்தேன். நியூட்ரினோ வருவதை நிறுத்தி வைத்தேன். 1993-ல் என்னை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்ந்தார்கள். ஆனால் எனக்கு தோல்வி வந்த போது என்னை விட்டு பலர் விலகி சென்றார்கள். எனக்கு பணம் வசதி கிடையாது. ஜாதி பலம் கிடையாது.

இவைகள் இல்லாமல் தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக ம.தி.மு.க.வளர்ந்து வருகிறது. எந்த அரசியல் தலைவர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் தீக்குளித்து தற்கொலைசெய்து கொள்ள மாட்டார்கள். தொண்டர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால் எனது உறவினர் சரவண சுரேஷ் விருதுநகர் சூலக்கரை மேட்டில் 10 லிட்டர்பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எனது தாயார் மதுவை ஒழிக்க போராடினார். நாட்டுக்காக எனது குடும்பம் பாடுபட்டு இருக்கிறது.

மதுரையில் மாநாடு

அ.தி.மு.க சார்பில் மதுரையில் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு திருவிழா போல் நடைபெற்று இருக்கிறது. முக்கியமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த மாநாட்டில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழப் போவதில்லை.

இதைவிட பெரிய மாநாடுகளை தி.மு.க நடத்தியுள்ளது. ம.தி.மு.க சார்பில் இதே மதுரையில் அடுத்த மாதம் 15-ந் தேதி மாநாடு நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story