ஓ.என்.ஜி.சி. பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்;
திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூடப்பட்ட எண்ணெய் கிணறு
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் மூன்று மாதங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதாக அனுமதி ேகட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓ.என்.ஜி.சி. தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த அடியக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் மராமத்து என்ற பெயரில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க முயல்வதாக கூறி, எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினருடன் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பணிகளை தொடங்கினர்
இந்தநிலையில் திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. சார்பில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் பணிகளை தொடங்கினர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து திருவாரூர் தாசில்தார் நக்கீரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினாா். அப்போது ஓ.என்.ஜி.சி.யில் தற்காலிகமாக மராமத்து பணிகள் நிறுத்தப்படும். மேலும் இந்த பிரச்சி னைக்கு உதவி கலெக்டர் தலைமையில் இரு தரப்பினருடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் ஓ.என்.ஜி.சி. பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.