நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:47 PM GMT)

உறிஞ்சிக்குழி அமைக்காத வீடுகளில் கழிவுநீர் வெளியேறும் வழியை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

உறிஞ்சிக்குழி அமைக்காத வீடுகளில் கழிவுநீர் வெளியேறும் வழியை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடுகளில் உறிஞ்சிக்குழி

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கட்டாயம் உறிஞ்சிக் குழி அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உறிஞ்சிக்குழி அமைக்காமல் கழிவுநீரை ஓடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளில் கழிவுநீர் வெளியேறும் வழியும் காங்கிரீட் கலவை மூலம் அடைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கட்டையன்விளை பகுதியில் பெரும்பாலான வீடுகளில் உறிஞ்சிக்குழி அமைக்க போதிய இடம் இல்லை. இதனால் உறிஞ்சிக்குழி அங்கு அமைக்க முடியாத நிலை. எனவே அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறும் வழியை கலவை மூலம் அடைக்கக்கூடாது என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுதொடர்பாக கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் மனுவும் கொடுக்கப்பட்டது.

பொதுமக்கள் சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று கட்டையன்விளை பகுதியில் வார்டு கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அந்த பகுதியில் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனே மாநகர் நல அதிகாரி ராம்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தை

அப்போது மாநகராட்சி சார்பில் கால்வாய் கரை பகுதியையொட்டி உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story