பாம்பு,செல்பூச்சிகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி


பாம்பு,செல்பூச்சிகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 26 July 2023 12:45 AM IST (Updated: 26 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பீளமேடு பகுதியில் செல்பூச்சிகள், பாம்புகளின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் இரவில் தூங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பீளமேடு


பீளமேடு பகுதியில் செல்பூச்சிகள், பாம்புகளின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் இரவில் தூங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.


உணவு தானிய கிடங்கு


கோவை பீளமேடு ரெயில் நிலையம் அருகே மத்திய அரசின் உணவு தானிய கிடங்கு உள்ளது. அதன் அருகே முருகன் நகர், ஸ்ரீராம் நகர், நேதாஜிநகர், ஹட்கோ காலனி, கட்டபொம்மன் வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள்.


இந்த உணவு தானிய கிடங்கில், ரேஷன் கடைகளுக்கு வழங்கப் படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் இருப்பு வைக்கப் பட்டு உள்ளன. அவற்றில் செல்பூச்சி பரவுவதை தடுக்க மருந்து தெளிக்கப்படும். ஆனால் கடந்த 4 மாதங்களாக சரியாக மருந்து தெளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


செல்பூச்சிகள் தொல்லை


இதன் காரணமாக இந்த உணவு தானிய கிடங்கில் இருந்து கூட்டம் கூட்டமாக செல்பூச்சிகள் வெளியே வருகின்றன. அவை, முருகன் நகர், ஸ்ரீராம் நகர், நேதாஜி நகர், ஹட்கோ காலனி, கட்டமொம்மன் வீதியில் உள்ள வீடுகளுக்கு செல்கிறது.


மேலும் வீடுகளில் உள்ள உணவு பொருட்களிலும் செல்பூச்சிகள் ஒட்டிக் கொள்கின்றன. இது போன்ற தொல்லைகளால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.


இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சித்ரா வெள்ளி யங்கிரி, பொதுமக்களுடன் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


தூங்க முடிய வில்லை


இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-


செல்பூச்சிகள் தொல்லையால் கடந்த 4 மாதமாக அவதியடைந்து வருகிறோம். உணவு பொருட்கள் அனைத்திலும் செல்பூச்சிகள் ஆக்கிரமித்து உள்ளன.

ஏதாவது ஒரு பொருளை திறந்த வெளியில் வைத்தால் அதற்குள் புகுந்து கொள்கின்றன. மெத்தை, தலைய ணைகளில் பதுங்கிக் கொள்கின்றன. இரவு நேரத்தில் மூட்டைப்பூச்சி போன்று கடிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் தூங்கக்கூட முடியவில்லை.


இது குறித்து உணவு தானிய கிடங்கு அதிகாரிகளிடம் கேட்டால், கடந்த 4 மாதங்களாக உணவு பொருட்களில் ஆக்கிரமிக்கும் செல்பூச்சிகளை ஒழிக்க வீரியமிக்க மருந்து வைக்க வேண்டாம் என்று கூறி விட்டனர்.

இதுவே பூச்சி பரவல் அதிகரிக்க காரணம். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாக கூறுகின்றனர்.


பாம்புகள் நடமாட்டம்


வீடுகளுக்குள் செல்பூச்சி தொல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே வந்தால் கண்ணாடி விரியன் உள்ளிட்ட விஷபாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

இதனால் செய்வதறியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாம்பு மற்றும் செல்பூச்சிகள் தொல்லையில் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story