போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
வெம்பக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பஸ் நிறுத்தம்
சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் சாலையில் வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், வேளாண்மை அலுவலகம், போலீஸ் நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளது.
துலுக்கன் குறிச்சி, கோட்டைப்பட்டி, விஜய கரிசல்குளம், கங்கர் சேவல், கோமாளிபட்டி, செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களின் பல்வேறு ேதவைகளை பூர்த்தி செய்ய இங்கு வருகின்றனர். தினமும் பல்வேறு பொதுமக்கள் வந்து செல்லும் இங்கு சிறிய நிழற்குடை மட்டுமே உள்ளது. ஆதலால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி நெடுஞ்சாலை துறை மூலமாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்கள், முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால் பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் காணப்படுகிறது. பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறாததால் வழக்கம்போல் அனைத்து பஸ்களும் பயணிகளை மெயின் சாலையில் இறக்கி விட்டு செல்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ெநரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆதலால் வெம்பக்கோட்டையில் உடனடியாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.