வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
ஆரணியில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஆரணி
ஆரணியில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பலத்த மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி நேற்று போளூர், செய்யாறு, ஆரணி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஆரணி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆரணி நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் புரண்டு ஓடியது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மேலும் ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் இரும்பேடு கூட்ரோட்டில் இருந்து ஊருக்கு செல்லக்கூடிய பாதையில் முறையான பக்க கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் சாலையோரம் உள்ள வீடுகளில் புகுந்தது.
இதனால் வீடுகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் கட்டிலில் மேல் அமர்ந்து இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருக்கும் அவல் நிலை நீடித்தது. தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வீடுகளில் தண்ணீர் புகுந்த பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தண்ணீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இரும்பேடு ஊராட்சி நிர்வாகத்தில் நிதி ஆதாரம் இருந்தும் ஊராட்சி தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் இடையே உள்ள போராட்டத்தின் காரணமாக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
88.2 மில்லிமீட்டர் மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 88.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
செய்யாறு - 83, ஆரணி - 72.8, வந்தவாசி - 23, வெம்பாக்கம் - 15, ஜமுனாமரத்தூா் - 5, சேத்துப்பட்டு - 1.