3 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்
வேட்டவலம் அருகே ஊராட்சி எல்லை பிரச்சினை காரணமாக 3 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே ஊராட்சி எல்லை பிரச்சினை காரணமாக 3 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணாநகர்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டவலம் அருகே சாணிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதி உள்ளது. இங்கு 90-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் 90-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு நாடழகானந்தல் ஊராட்சியில் வாக்குரிமை உள்ளது. மீதமுள்ள வாக்காளர்களுக்கு சாணிப்பூண்டி ஊராட்சியில் வாக்குரிமை உள்ளது.
குடிநீர்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாணிப்பூண்டி ஊராட்சி ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிைல நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீரை ஏற்றி அதன் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சாணிப்பூண்டி ஊராட்சியில் இருந்த வாக்குரிமைகளை நாடழகானந்தல் ஊராட்சிக்கு மாற்றி உள்ளனர். கடைசியாக நடந்த தேர்தலில் அண்ணாநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் நாடழகானந்தல் ஊராட்சியில் வாக்களித்தனர்.
அதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக உங்கள் வாக்குரிமை அங்கு இருக்கும் போது நாங்கள் ஏன் உங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி தற்போதைய ஊராட்சி நிர்வாகத்தினர் சாணிப்பூண்டி ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பழுதடைந்தும் சரி செய்யாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் அவதி
இதனால் இந்த பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்கு நிலங்களில் கிணற்றில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர்.
ஒரே ஒன்றியத்திற்குட்பட்ட 2 கிராம எல்லையில் அமைந்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.