பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


பொங்கல் பண்டிகையை பொருட்கள் வாங்க திருவண்ணாமலை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள், மஞ்சள் குலைகள் விற்பனை அமோகமாக இருந்தது.

திருவண்ணாமலை

பொங்கல் பண்டிகையை பொருட்கள் வாங்க திருவண்ணாமலை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள், மஞ்சள் குலைகள் விற்பனை அமோகமாக இருந்தது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவர்.

விவசாயிகள் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை போற்றுவதற்காக நாளை மாட்டு பொங்கலை கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான நேற்று பழையன கழிதல், புதியன புகுதல் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இயற்கையான பழைய பொருட்களை மக்கள் வெளியே கொண்டு வந்து தீயிட்டு எரித்தனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை நகர வீதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. காய்கறி மார்க்கெட்டில் அனைத்து விதமான காய்கறிகள் குவிக்கப்பட்டிருந்தன. காலை முதலே மார்க்கெட்டில் விண்ணை முட்டும் விலை உயர்வை பொருட்படுத்தாமல் காய்கறிகளை பெரிய பைகளில் வாங்கிச்சென்றனர்.

பகலில் மிதமான கூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலைக்கு மேல் கூட்டம் அலைமோதியது. பல்வேறு இடங்களில் தற்காலிக துணி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பலர் அந்த கடைகளிலும் துணிகளை எடுத்தனர்.

கரும்பு-மஞ்சள்

மேலும் பொங்கல் பண்டிகைக்கு மதன்மையான மஞ்சள் குலைகள், கரும்புகள் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது.

அதேபோல் பானை, கோலப்பொடி, பழங்கள், பூக்கள் போன்றவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மக்கள் பலர் கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். போக்குவரத்து பாதிப்பை போலீசார் அவ்வபோது சீர் செய்தால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் போலீசார் சரி செய்து வந்தனர்.

இதேபோல் நாளை மாட்டுப்பொங்கலையொட்டி மாட்டுக்கு தேவையான மூக்கனாங் கயிறு பல்வேறு வண்ணங்களிலும், பல்வேறு அளவில் மணிகள் போன்றவை நேற்று திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் விற்கப்பட்டது. மாடுகளை வளர்ப்பவர்கள் பலர் ஆர்வமுடன் அதனை வாங்கி சென்றனர். சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. அந்த பஸ்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால் பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Next Story