பண்ருட்டி போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்
நெய்வேலியில் பண்ருட்டி போலீஸ்காரரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி,
பெண்ணுடன் தொடர்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சிவராமன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன் மகன் பிரகாஷ் (வயது 35). குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலைய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தபோது, நெய்வேலி பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பெண்ணும், அவருடைய கணவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். அந்த பெண் சங்கராபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ் பாதுகாப்பு பணிக்காக கள்ளக்குறிச்சி அருகே சென்றபோது, சங்கராபுரத்தில் உள்ள அந்த பெண்ணை சந்தித்துள்ளார்.
மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்
இதுபற்றி தகவல் அறிந்த அந்த பெண்ணின் கணவர், செல்போன் மூலம் பிரகாசை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் நெய்வேலிக்கு சென்று அந்த பெண்ணின் கணவரை தாக்கி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பிரகாஷை மடக்கி பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரகாஷை மீட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ்காரர் பிரகாஷ் மீது டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் குள்ளஞ்சாவடி போலீஸ்காரர் பிரகாஷை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.