12 ஆண்டுகளாகியும் முடிவடையாத பயணிகள் நிழலக கட்டுமான பணி
மன்னார்குடி அருகே 12 ஆண்டுகளாகியும் பயணிகள் நிழலக கட்டுமான பணி முடிவடையவில்லை. இதனால் அந்த பயணிகள் நிழலகம் மதுபாராக மாறி இருப்பதால் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மன்னார்குடி அருகே 12 ஆண்டுகளாகியும் பயணிகள் நிழலக கட்டுமான பணி முடிவடையவில்லை. இதனால் அந்த பயணிகள் நிழலகம் மதுபாராக மாறி இருப்பதால் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
பயணிகள் நிழலகம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை ஊராட்சியில் தளிக்கோட்டை, மேல தளிக்கோட்டை மற்றும் வடசேரி சாலை இணைப்பு சந்திப்பில் 2011-ம் ஆண்டு பயணிகள் நிழலக கட்டுமான பணி தொடங்கியது.
மேலதளிக்கோட்டை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த நிழலகம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால் 12 ஆண்டுகளாகியும் இதன் கட்டுமான பணிகள் முடிவடையவில்லை. இந்த நிழலக கட்டுமானத்தின் மீது சிமெண்டு பூசப்படவில்லை. தளம் போடப்படவில்லை. இருக்கைகளும் அமைக்கப்படவில்லை என பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மதுபார்
ஆண்டுகள் 12 ஆகிவிட்ட போதிலும் இதுவரை இந்த பயணிகள் நிழலகம் கட்டுமான பணிகள் நிறைவடையாமல் இருப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் இது நாள் வரை நிழலகம் கட்டி முடிக்கப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
தற்போது இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இந்த நிழலகத்தை மது பாராக பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'மக்களின் வரிப்பணத்தில் கட்ட தொடங்கப்பட்ட இந்த பயணிகள் நிழலகம் தற்போது வீணாக கிடக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த நிழலக கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு விட வேண்டும்' என்றனர்.