கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் மைதானம் இல்லை- கிராம மக்கள் வேதனை


கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் மைதானம் இல்லை- கிராம மக்கள் வேதனை
x
தினத்தந்தி 12 Jun 2023 7:15 PM GMT (Updated: 12 Jun 2023 7:16 PM GMT)

மன்னார்குடி அருகே கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் மைதானம் இல்லாதது கிராம மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

திருவாரூர்

மன்னார்குடி அருகே கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் மைதானம் இல்லாதது கிராம மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரனில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஆரம்ப காலத்தில் நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. 1998-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர் 2009-2010-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.அப்போது 700 மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். தற்போது போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்து 500 மாணவ, மாணவிகள் மட்டும் பயின்று வரும் சூழல் உள்ளது.

ஆசிரியர் பணியிடங்கள் காலி

பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கிலத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணியடம் காலியாக உள்ளது. அதேபோல தமிழ் பாடத்துக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பாடங்களை பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் நடத்துவதால் மாணவர்கள் கற்கும் திறன் பாதிக்கப்படுவதாக ஊர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போதிய வகுப்பறைகள் இல்லாததால் வெளியில் மரத்தடியிலும் குறுகிய இடத்திலும் வகுப்பு நடைபெறுவதால் மாணவர்களுக்கு கவனசிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்த பள்ளியில் போதுமான கழிவறை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் கூடுதலாக தனித்தனி கழிவறைகளை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்பந்தில் சாதனை

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து சாதித்து வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளிக்கென விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள் மன்னார்குடி சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். இது கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. பள்ளிக்கென தனியாக மைதானம் இருக்குமானால் விளையாட்டில் பல சாதனைகளை இந்த பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படைப்பார்கள் என கிராம மக்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

இது குறித்து சவளக்காரனை சேர்ந்த பள்ளியின் கல்விக்குழு தலைவர் பாப்பையன் கூறியதாவது:-

பள்ளியில் உள்ள பழைய கழிவறையை வாரத்துக்கு 2 முறை மட்டுமே வெளி ஆட்களை வைத்து சுத்தம் செய்து வந்தனர். அவ்வாறு சுத்தம் செய்பவருக்கு போதுமான சம்பளம் இல்லாததால் அவரும் இப்போது வருவது கிடையாது. கழிவறை சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசிவருவதால் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதே போல வகுப்பறையை சுத்தம் செய்ய ஆளில்லாததால் மாணவர்களே சுத்தம் செய்யும் அவலநிலை உள்ளது. எனவே பள்ளிக்கு துப்புரவு தொழிலாளரை நியமிக்க வேண்டும். மேலும் இப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் தெருவுக்கு சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர். குடிநீர் தொட்டி அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகேஷ்:-

கோவாவில் இந்திய அளவிளான பெண்கள் ஜூனியர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இந்த அணியில் இந்த பள்ளி மாணவிகள் 2 பேர் இருந்தனர். இவர்கள் தமிழக அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தனர்.

தற்போது தமிழ்நாடுஅளவில் நடைபெற்ற போட்டியிலும் இந்த பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மேலும் இந்த விளையாட்டு மூலமாக காவல் துறை பணியில் இந்த பள்ளியில் படித்த மாணவிகள் 6 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால் இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மன்னார்குடி சென்று தனியார் பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற வேண்டியுள்ளது வேதனை அளிக்கிறது. இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டும். நிரந்தர உடற்கல்வி ஆசிரியரையும் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story