வடுகபாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
வடுகபாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
சேவூர்
சேவூர் அருகே வடுகபாளையத்தில் பொதுமக்கள் பிரச்சினையை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலணியில் உள்ள பழுதடைந்த மகளிர் சுகாதார வளாகத்திற்கு பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் பணிகள் நடைபெறவில்லை. உடனே பணிகளை துவக்க கோரியும், ஆதிதிராவிடர் காலனிக்கு புதிய மழைநீர் வடிகால் அமைத்து தரக்கோரியும், குடிநீர் வடுகபாளையம் பகுதிக்கு இரண்டு நாட்கள் ஒரு முறை கிடைப்பதை முறையாக விநியோகம் செய்யக்கோரியும்,
ராயகவுண்டம்புதூரில் விழுந்து விடும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அகற்றி புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்து தரக்கோரியும், நஞ்சை தாமரைக்குளம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள சாக்கடைக்கு மூடுகள் அமைத்து தரக்கோரியும், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உள்ள பழைய கிணற்றுகளுக்கு கம்பி வலை அமைக்க கோரியும், வடுகபாளையம், ராயகவுண்டம்புதூர், நஞ்சை தாமரைக் குளம், பகுதியில் உள்ள மயானத்தை சுத்தம் செய்து, தெரு விளக்கு, சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரியும், காட்டுவளவு பகுதிக்கு கான்கிரீட் சாலை மற்றும் அண்ணாமலை கார்டனுக்கு தெரு விளக்கு வசதி செய்து தரக் கோரியும், வீடுக்கு குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு வழங்க கோரியும், இக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்.
காத்திருப்பு போராட்டம்
இதில் ஊராட்சிகளில் சாலை வசதி, சாக்கடை மற்றும் கழிப்பிடங்களுக்கு, பணிகள் நடைபெற வேலை ஒப்பந்தம் போடப்பட்டும் ஆறு மாதங்கள் கடந்தும் வேலைகள் நடைபெறாததையும் கண்டித்தும்.மேலும் 2021 வருடம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி 43 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்ததை நிறைவேற்றாமல் இருக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடுகபாளையம் ஊராட்சி கிளைகள் சார்பில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் திருலோகசந்திரன், ஊராட்சி செயலாளர் கவிதா, ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி இளையராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தங்களது பழைய கோரிக்கைகள் 10 நாட்களுக்குள் நிறைவேற்றி தரப்படும்.மீதமுள்ள கோரிக்கைகள் விரைந்து முடித்து தருவதாக கூறியதை தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப் போராட்டமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடுகபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வடுகபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.அய்யம்மாள், ஆர்.தீபா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகி எஸ்.மல்லப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் சி.சின்னசாமி, கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, சின்னராசு, லதா, கோமதி உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.