ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு


ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு
x

குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டு பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். கேரளாவில் நாளை முதல் பயணத்தை தொடங்க உள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டு பாதயாத்திரைக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். கேரளாவில் நாளை முதல் பயணத்தை தொடங்க உள்ளார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவு செய்ய உள்ளார்.

இதற்கான தொடக்க விழா கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

2-வது நாளன்று அகஸ்தீஸ்வரம் முதல் நாகர்கோவில் வரை ராகுல்காந்தி பாதயாத்திரையாக வந்தார். 2-வது நாள் பயணத்தை முடித்ததும் இரவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கேரவனில் தங்கினார்.

3-வது நாள் பாதயாத்திரை

3-வது நாளான நேற்று காலை பாதயாத்திரையை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து தொடங்கினார். முன்னதாக அங்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் நாகர்கோவிலைச் சேர்ந்த எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை வரவழைத்து அவர் கவுரவப்படுத்தினார்.

இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கினார். தொண்டர்கள் புடை சூழ அவர் உற்சாகத்தோடு நடந்தார். அவருடன் பாதயாத்திரை குழுவினரும் வேகமாக நடந்து சென்றனர்.

3-வது நாள் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், திக்விஜய்சிங், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார். பிரின்ஸ், விஜயதரணி, செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., துணை தலைவர்கள் கோபண்ணா, ராபர்ட் புரூஸ், இளைஞர் காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டைசன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், கணியாகுளம் பஞ்சாயத்து தலைவர் ஏஞ்சலின் ஷரோனா, மாவட்ட தலைவர்கள் பினுலால் சிங், கே.டி.உதயம், நவீன் குமார் உள்பட அகில இந்திய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு

பாதயாத்திரையில் தேசியக்கொடியை மரியாதையுடன் ஏந்தியவாறு தொண்டர் ஒருவர் முன்செல்ல அவரை தொடர்ந்து பாதயாத்திரை குழுவினரும், காங்கிரஸ் கட்சியினரும் வெள்ளை சீருடையில் சென்றனர். சிலர் ராகுல்காந்தி உருவம் வரையப்பட்ட டி-சர்ட் அணிந்தபடி நடந்து சென்றதையும் காணமுடிந்தது.

சாலையின் இருபுறமும் திரண்டு நின்று ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் காங்கிரஸ் கட்சியின் கொடிகளும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக சுமார் 12 கி.மீ. தூரத்தை ராகுல்காந்தி காலை 9.30 மணிக்கு கடந்தார். பின்னர் புலியூர்குறிச்சியில் உள்ள புனித தேவசகாயம் ஆலயத்தில் தங்கி ஓய்வெடுத்தார்.

குறிப்பிட்ட நேரத்தை விட...

மாலை 5.15 மணிக்கு புலியூர்குறிச்சியில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய அவர் அழகியமண்டபம் சந்திப்பில் 6.20 மணிக்கு முடித்தார். குறிப்பிட்ட நேரத்தை விட நேற்றும் வேகமாக நடந்து வந்து ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில், நான் இந்த பாதயாத்திரை மேற்கொள்ள காரணம், நாடு எந்த விதத்திலும் பிளவுபட்டு விடகூடாது என்பது தான். சாதி, மதம் மற்றும் மொழி ஆகிய எந்த விதத்திலும் நாடு பிளவுபடாமல், இந்திய நாடாக மட்டும் இருக்க வேண்டும். என்னுடன் பாத யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்றார். பின்னர் அவர் முளகுமூடில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளிக்கு கார் மூலம் சென்று தங்கினார்.

பாதயாத்திரையின் போது ராகுல்காந்திக்கு சில இடங்களில் பூக்களை தூவி மாணவ, மாணவிகள் வரவேற்றனர். மேலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடந்தது.

விவசாய சங்க தலைவர் சந்திப்பு

முன்னதாக ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். அவர் 2 கி.மீ. தூரம் ராகுல்காந்தியுடன் இணைந்து நடந்தார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தார்.

இன்று (சனிக்கிழமை) காலை முளகுமூட்டில் இருந்து 4-வது நாள் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கி கேரள மாநில எல்லையான செருவாரகோணத்தில் நிறைவு செய்கிறார்.

நாளை முதல் கேரளா...

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்ள உள்ளார். அங்கு அவர் 18 நாட்கள் சாலை வழியாக நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.


Next Story