பூம்புகார் வந்தடைந்த காவிரி நீருக்கு உற்சாக வரவேற்பு


பூம்புகார் வந்தடைந்த காவிரி நீருக்கு உற்சாக வரவேற்பு
x

மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வந்தடைந்த காவிரி நீருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:-

மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வந்தடைந்த காவிரி நீருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூம்புகாரில் சங்கமமாகும் காவிரி

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல ஊர்களை கடந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது. காவிரி ஆற்றின் கடைசி கதவணை பூம்புகார் அருகே மேலையூரில் அமைந்து உள்ளது. இந்த கதவணை வழியாக செல்லும் காவிரி நீர் பூம்புகார் கடலில் கலக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக காவிரி நீர் கடந்த மாதம் (மே) 24-ந் ேததி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உற்சாக வரவேற்பு

மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேலான நிலையில் நேற்று அதிகாலை காவிரி ஆறு பூம்புகாரையொட்டி உள்ள கடைசி கதவணையை வந்தடைந்தது. இதையொட்டி அங்கு மயிலாடுதுறை பொதுப்பணித்துறை உப கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணப்பன், விஜயகுமார், உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

அப்போது அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் நெல் விதைகள் மற்றும் பூக்களை தூவி காவிரி நீரை உற்சாகமாக வரவேற்றனர். இதுகுறித்து செயற்பொறியாளர் சண்முகம் கூறுகையில், 'பூம்புகாரையொட்டி உள்ள மேலையூர் கதவணையில் நீரை தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்கள் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கு முறைவைத்து தண்ணீர் திறக்கப்படும். இந்த கதவணை மூலமாக 5,077 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன' என்றார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

பூம்புகாரை காவிரி நீர் வந்தடைந்தது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டு உரிய நேரத்தில் காவிரி நீர் வந்து சேர்ந்தது. இந்த ஆண்டு 20 நாட்களுக்கு முன்னரே தண்ணீர் கிடைத்துள்ளது. இதன் மூலமாக மகிழ்ச்சியோடு கூடுதல் பரப்பளவில் சாகுபடியை தொடங்குவோம். முறை வைக்காமல் நீரை தொடர்ந்து வழங்க வேண்டும்' என்றார்.

திருக்கடையூர்

அதேபோல் கடைமடை பகுதியான திருக்கடையூரில் உள்ள அம்மன் ஆற்று கதவணையில் காவிரி நீருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவினர். மேலும் அங்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story