தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் போலீஸ் அலுவலகத்தில் மனு
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் போலீஸ் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஸ்காட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த பங்குச்சந்தை தனியார் வணிக நிதி நிறுவனத்திடம் பணத்தை கட்டி ஏமாந்து விட்டதாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தாா். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனம் நடத்தி இதே போன்று பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரின் மனைவி சிவசங்கரியை (வயது 35) கடந்த 27-ந்தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிவசங்கரியின் கணவர் சந்தோஷ்குமார், குன்னம் தாலுகா, பென்னக்கோணத்தை சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேற்படி தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று பெரம்பலூர் மாவட்டமின்றி, சேலம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு வந்து குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் அவர்கள் கையில் விளம்பர பதாகை ஒன்று வைத்திருந்தனர். அதில், காணவில்லை என்று ஸ்காட்ஸ் பங்குச்சந்தை வணிக நிறுவனத்தின் செயலாளர் மற்றும் இயக்குனர் சந்தோஷ்குமார் பண மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ளார். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் யாரும் இனி முதலீடு செய்து ஏமாறாதீர். இவரை பார்த்தால் உடனே அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள். மேலும் பென்னக்கோணம் ஊராட்சி மன்ற தலைவரின் இளைய மகனான சந்தோஷ்குமார், பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 5 ஆயிரம் நபர்களிடம் இருந்து சுமார் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பணம் வசூல் செய்து போலியான பங்குச்சந்தை முதலீடு நிறுவனத்தை நடத்தி வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.