8 மாதங்களாக வாக்காளர் அட்டை பெற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்


8 மாதங்களாக வாக்காளர் அட்டை பெற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்
x

8 மாதங்களாக வாக்காளர் அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது.

திருச்சி

வாக்காளர் அடையாள அட்டை

18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். எனவே இவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்ததும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டி விண்ணப்பிக்கின்றனர். வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களையும் பலர் மேற்கொள்கின்றனர். இதற்காக பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த வாக்காளர் அடையாள அட்டை வாக்களிக்க மட்டுமல்லாமல் பல்வேறு ஆவணங்கள் பெறவும் முக்கிய அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெறுபவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்துடன் அச்சிடப்பட்டு, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய வாக்காளர்கள் அவதி

திருச்சி மாவட்டத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பிப்ரவரி மாதம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக வாக்காளர் அட்டை அச்சிட்டு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுபற்றி வாக்காளர் அட்டை கிடைக்காமல் தவிக்கும் இளம்தலைமுறை வாக்காளரான திருச்சியை சேர்ந்த ரமேஷ் கூறும்போது, எனது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டு 8 மாதங்கள் ஆகின்றன. ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றில் முகவரி மாற்றம் செய்யவும், பல்வேறு அடையாள ஆவணங்களுக்கும் வாக்காளர் அட்டை தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து இ-சேவை மையத்தில் கேட்டதற்கு எங்களுக்கு அட்டை அச்சிட தேவையான அட்டை வழங்கவில்லை. அத்துடன் அந்த பணிகளை நிறுத்தி வைக்கும்படி கூறியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க வேண்டியுள்ளதாக கூறுகிறார்கள். எனவே விரைவில் வாக்காளர் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வடிவம் மாறும் அட்டை

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர் அட்டை அச்சிட தேவையான அட்டை யாருக்கும் வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் இருந்து யாருக்கும் வாக்காளர் அட்டை அச்சிட்டு கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் வாக்காளர் அட்டையின் வடிவம், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை போன்று மாற இருப்பதுடன், அதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கும், திருத்தம் மேற்கொண்டவர்களுக்கும் சென்னையில் இருந்தே விரைவு தபால் மூலம் அவர்களின் முகவரிக்கே வினியோகிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.


Next Story