யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள் -எடப்பாடி பழனிசாமி பேட்டி


யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள் -எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி என்றும், யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவை,

வீட்டு வரிகள், ஏனைய வரிகள் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்கிற அரசாக இந்த அரசு இருக்கிறது. முன்பு காலதாமதமாக வரி செலுத்தினாலும் அதற்கு எவ்வித வட்டியும் வசூல் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் காலம்தாழ்த்தி வீட்டு வரி கட்டினால் அதற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை வலைத்தளங்கள் வழியாக எடுத்து கூறினால் பொறுத்து கொள்ள முடியாமல் கைது செய்கின்றனர். குறிப்பாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவதுதான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது.

பிரதான எதிர்க்கட்சி

தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததைதான் நிறைவேற்ற வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி போராடுகின்றனர். எனவே தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி இடைநிலை ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.தான் உள்ளது. மக்களிடம் சென்று கேளுங்கள், யாருக்கு யார் எதிரி என்று சொல்வார்கள். தி.மு.க.வுடன் யாருக்கு போட்டி என்பதில் அ.தி.மு.க.விற்கும், பா.ஜனதாவிற்கும் இடையே போட்டி இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாக கூறுகின்றீர்கள். அவர் மாய உலகில் மிதக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும்போது அதற்கு விடிவு காலம் பிறக்கும்.

கூட்டணி

பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து கடந்த 25-ந் தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெளிவாக அறிவித்து விட்டோம். வி.பி.துரைசாமி கூறும் கருத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. முதலாவது தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான மற்றும் தமிழகம் வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வர வேண்டும். அதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என்ற வகையில் நாங்கள் இதை முன்னிறுத்துவோம். தமிழ்நாட்டு மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

டி.டி.வி. தினகரன் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story