மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு பழனி நகர தலைவர் காளீஸ்வரி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா, ஒன்றிய தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது கோவில் பகுதியில் உள்ள மண்டபங்களில் கைப்பிடியுடன் சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் மற்றும் கோவில் அலுவலர்கள் அங்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் நடராஜன் தரப்பில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம்

அப்போது பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்படவுள்ள மனநல காப்பக மராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவிலில் உள்ள மண்டபங்கள், கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியமர்த்தப்படும் காவலர் பணியிடங்களில் 5 சதவீத இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்.

கோவில் ரோப்கார் நிலையத்தில் உள்ளதைபோல மின்இழுவை ரெயில்நிலையத்திலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் லிப்ட் வசதி செய்து தர வேண்டும். கோசாலையில் உள்ள மாடுகளை முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story