தியாகதுருகத்தில்ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட முயற்சி


தியாகதுருகத்தில்ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

தியாகதுருகத்தில் ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட முயன்றனர்.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதத்தில் 2-வது செவ்வாய்க்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. இந்தநிலையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பு செய்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், செந்தில் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேலு, ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் வேலு, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம் ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை

அப்போது மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 2- வது செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்க வேண்டும், ரூ.294 கூலி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என கூறினர். இதனைக் கேட்ட அதிகாரிகள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்துவதாக உறுதி அளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story