கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை


கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
x

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கக்கோரி கடந்த மாதம் 21-ந்தேதி கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மீண்டும் வேலை வழங்கக்கோரி அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கீழ்பென்னாத்தூர் தாலுகா தலைவர் பாக்யராஜ், செயலாளர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி வந்து, நிர்வாகிகளிடம் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story