உற்பத்தி பொருளை விற்பனை செய்ய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பொருளை வாகன அங்காடி மூலம் நேரடி விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பொருளை வாகன அங்காடி மூலம் நேரடி விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாகன அங்காடி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகன அங்காடி மூலம் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கென சிவகங்கை மாவட்டத்திற்கு 3 மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடிகள் வழங்கப்பட உள்ளது.
இதை பெறுவதற்கு மாற்றுத்திறனாளி சுய உதவிக்குழு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சுய உதவிக்குழுவில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவி குழுவானது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்து தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு செய்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருத்தல் அவசியம். மேலும், பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பதையும், வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதுமில்லை எனவும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் சான்றிதழ் வழங்க வேண்டும்.
மேலும் விண்ணப்பங்களை இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை-630562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575 240962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.