போலீசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்


போலீசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்
x

பழனியில், போலீசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், பழனி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலக பகுதியில் இருந்து, பழனி டவுன் போலீஸ் நிலையம் நோக்கி புதுதாராபுரம் சாலையில் ஊர்வலமாக வந்தனர்.

இதற்கிடையே டவுன் போலீஸ் நிலைய நுழைவு வாயில் கதவை போலீசார் பூட்டினர். மேலும் தடுப்புகளை வைத்து போலீஸ் நிலையத்துக்குள் யாரும் செல்ல முடியாதபடி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

மாற்றுத்திறனாளிகள் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, பழனி கிரிவீதிகளில் ஆர்ப்பாட்டம், தெருமுனை பிரசார கூட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டு பிற அமைப்புகளுக்கு மட்டும் போலீஸ் அனுமதி அளிக்கின்றனர். இது ஏற்புடையது அல்ல. எனவே மாற்றுத்திறனாளிகள் மீதான விரோத நடவடிக்கையை டவுன் போலீஸ் கடைபிடிக்கிறது என கூறி கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டம் காரணமாக தாராபுரம், உடுமலை மார்க்கமாக வந்த பஸ்கள் மாற்றுப்பாதையில் பழனி பஸ்நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.


Next Story