கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அகவொளித் திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் அற்புதம், பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 சதவீதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் வாயிலாக, அவரவர் தகுதியின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் ஒரு சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி வேலை வழங்க வேண்டும். மாநகர், நகர், ஊராட்சி பகுதிகளில் கோவில்களில் பாதுகாப்பான இடங்களில் சுயவேலை மேற்கொள்ளும் வகையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.எச்டி. முடித்தவர்களை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளராக உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கொடுத்து, அதனை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்புமாறு வலியுறுத்தி விட்டு கலைந்து சென்றனர்.


Next Story