மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலூகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு எந்த இடம் ஒதுக்கப்பட்டது என்று அளந்து கொடுக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை தாலூகா அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தாலூகா அலுவலகத்தில் கேட்க சென்றால் மாற்றுத்திறனாளிகளை அங்குள்ளவர்கள் அவதூறாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று லிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சின்னராசு என்பவர் கையில் தூக்கு கயிற்றுடன் வந்தார். அவருடன் மாற்றுதிறனாளி களும் வந்தனர். தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச பட்டாவிற்கு உரிய இடத்தினை அளவீடு செய்து தர வேண்டும், தங்களை அவதூறாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா மற்றும் தூக்கு கயிறுடன் தாலூகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கோவில்பட்டி தாசில்தார் சுசீலா பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் அளந்து இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தாசில்தார் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.