மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது


மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது
x

தி.மு.க.ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என வசூர் கிராமத்தில் நடந்்த சிறப்புமனுநீதிநாள் முகாமில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் பேசினர்.

ராணிப்பேட்டை

சிறப்பு மனுநீதிநாள் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுக்காவை சேர்ந்த வசூர், பள்ளேரி மற்றும் கொண்டகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வசூர் கிராமத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஜெகத்ரட்சகன் எம்.பி.முன்னிலை வகித்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர்

சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு, 247 பயனாளிகள் மற்றும் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 கோடியே 76 இலட்சத்து 49 ஆயிரத்து 673 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,

கடந்த தேர்தலின் போது எனக்கு வாக்களித்தால் ஒரு மருத்துவமனையினை கொண்டு வருவேன் என்று சொல்லியிருந்தேன். அதனை எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வகையில் சேர்க்காடு கூட்டுரோடில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேர்க்காடு கூட்டுரோட்டில் ஒரு கலைக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் மேற்குறிப்பிட்ட அனைத்துப் திட்டப் பணிகளும் முடிக்கப்பட்டு விடும்.

அதேபோன்று காவிரி கூட்டு குடிநிர் திட்டத்தினையும் இப்பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்படுகிறது.

காட்பாடி தொகுதியில் சிப்காட் ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளோம். அதில் காட்பாடி தொகுதி சுற்று வட்டாரத்திலுள்ள மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். விரைவில் முதல்-அமைச்சரால் சிப்காட் தொடங்கப்படும். இதுபோன்று மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்' என்றார்.

கோவில் போன்று...

அமைச்சர் காந்தி பேசியதாவது:-அமைச்சர் துரைமுருகன் தன் தொகுதியை கோவில் போன்று பாவித்து பொதுமக்களுக்கான திட்டப் பணிகளை செய்து வருகின்றார். மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்காமல் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மகத்தான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48, இல்லம் தேடிக் கல்வி, காலை உணவு. புதுமைப்பெண் இது போன்ற மகத்தான திட்டங்களால் பல்வேறு தரப்பினர் பயனடைந்து வருகின்றனர்.

மக்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கிட ஏதுவாக முதல்வரின் முகவரி என்ற திட்டத்தினை தொடங்கி அதில் பெறப்படும் மனுக்களுக்கு தகுதியின் அடிப்படையில் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது. மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றார்கள்'

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், உதவி கலெக்டர் வினோத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் சேஷாவெங்கட், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் வேல்முருகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாந்தி, புஷ்பா மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story