போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் பொதுமக்களிடம் 17 மனுக்களை பெற்றனர். பார்வையற்றோர்கள் வந்து தங்களது பள்ளி நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். முகாமில் உதவி போலீஸ் கமிஷனர்கள் ராஜேஸ்வரன், ஆவுடையப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மனு ெகாடுப்பதற்காக காலை 10 மணியில் இருந்தே மக்கள் காத்திருந்தனர். அப்போது சென்னையில் இருந்து தமிழக டி.ஜி.பி. காணொலிக்காட்சி மூலம் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்தார். இதனால் மதியம் 1 மணியளவில் போலீஸ் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து மனுக்களை வழங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அவர்களில் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதேபோன்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் 27 பேர் கலந்து கொண்டு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் கோரிக்கை மனுகளை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டும், டி.ஜி.பி.யுடன் காணொலிக்காட்சியில் பேசியதால், அங்கு மனு அளிக்க வந்தவர்களும் காத்திருந்தனர்.